திட்டமிட்டே என்னை சைத்ரா ஏமாற்றினார்; தொழில்அதிபர் கோவிந்தபாபு பேட்டி
இந்திரா உணவகத்திற்கும், மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தன்னை திட்டமிட்டு சைத்ரா ஏமாற்றி விட்டார் என்றும் தொழில்அதிபர் கோவிந்தபாபு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
இந்திரா உணவகத்திற்கும், மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தன்னை திட்டமிட்டு சைத்ரா ஏமாற்றி விட்டார் என்றும் தொழில்அதிபர் கோவிந்தபாபு தெரிவித்துள்ளார்.
ரூ.34 கோடி பாக்கி
சட்டசபை தேர்தலில் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரியிடம் இந்து அமைப்பின் பெண் பிரமுகர் சைத்ரா உள்பட 7 பேர் ரூ.5 கோடியை பெற்று மோசடி செய்தனர். இதையடுத்து சைத்ரா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மடாதிபதியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மடாதிபதி சிக்கினால் பெரிய, பெரிய பிரபலங்கள் சிக்குவார்கள் என்றும், இந்திரா உணவகத்திற்கான பாக்கி தொகை வழங்காமல் இருப்பதால் தன் மீது குற்றச்சாட்டு கூறுவதாகவும் சைத்ரா நேற்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
தொழில்அதிபர் கோவிந்தபாபு பெங்களூருவில் இந்திரா உணவகங்களுக்கு உணவு வகைகள் சப்ளை செய்யும் டெண்டர் எடுத்துள்ளார். 98-க்கும் மேற்பட்ட இந்திரா உணவகங்களுக்கு அவர் உணவுகளை வழங்கி வருகிறார். இதற்காக ரூ.34 கோடி கொடுக்காமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சைத்ராவின் குற்றச்சாட்டு குறித்து கோவிந்தபாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திட்டமிட்டு ஏமாற்றி விட்டார்
சட்டசபை தேர்தலில் பைந்தூர் தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வாங்கி கொடுப்பதாக மடாதிபதி, சைத்ரா உள்ளிட்டோர் ரூ.5 கோடி வாங்கினர். சீட் வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்துவிட்டனர். இந்திரா உணவகத்திற்கு உணவு சப்ளை செய்வது எனது தொழில். இந்திரா உணவகம் மட்டும் இல்லை, பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு நிகழ்ச்சிகளுக்கும் உணவுகளை வழங்கி வருகிறேன்.
இந்திரா உணவகத்திற்கு உணவு வழங்கியதற்காக பாக்கி வைத்துள்ள பணத்திற்கும், என்னிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு சதித்திட்டம் தீட்டி சைத்ரா மோசடி செய்துவிட்டார். மோசடி வெளியே தெரிந்ததும், அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.