கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவுகள் வெளியீடு
கர்நாடகத்தில் தொழிற்படிப்புக்கான பொது நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெங்களூரு மாணவர் முதலிடம் பிடித்தார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சி.இ.டி. தேர்வு முடிவுகள்
கர்நாடகத்தில் தொழிற்படிப்புக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) கடந்த மாதம் (மே) 20 மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்றது. அதாவது என்ஜினீயரிங், பி.எஸ்.சி. (விவசாயம், பட்டு வளர்ப்பு, தோட்டக்கலை), பி.பார்ம் மற்றும் டி.பார்ம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் தகுதியான மாணவர்ககளை தேர்வு செய்ய இந்த பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இருந்தது.
இந்த தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 610 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 592 மையங்களில் தேர்வு நடைபெற்றிருந்தது. விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 345 மாணவர்கள் தேர்வை எழுதி இருந்தார்கள். இந்த பொதுநுழைவு தேர்வுக்கான முடிவுகள் இன்று (அதாவது நேற்று) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
2 லட்சம் மாணவர்கள் தகுதி
அதன்படி, என்ஜினீயரிங் பிரிவில் 2 லட்சத்து 3 ஆயிரத் 381 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பி.எஸ்.சி. (விவசாய பிரிவில்) 1 லட்சத்து 64 ஆயிரத்து 187 பேரும், பி.வி.எஸ்.சி (கால்நடை பராமரிப்பு பிரிவில்) 1 லட்சத்து 66 ஆயிரத் 756 பேரும், பி.பார்ம் (மருந்தியல் பிரிவில்) 2 லட்சத்து 6 ஆயிரத்து 191 பேரும், பி.எஸ்.சி நர்சிங் பிரிவில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 808 பேரும், டி பார்ம் பிரிவில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 746 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 1.1 லட்சம் மாணவர்கள் சேருவதற்கு இடங்கள் உள்ளன. இதில், 53 ஆயிரத்து 248 இடங்கள் அரசு ஒதுக்கீடாகவும், 25 ஆயிரத்து 171 இடங்கள் காமட்-கே மற்றும் 33 ஆயிரத்து 463 இடங்கள், கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும் நிரப்பப்படும். கடந்த முறை தொழிற்படிப்புக்கான கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் அந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
பெங்களூரு மாணவர் முதலிடம்
ஒரு வாரத்திற்குள் மாணவர்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு, தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களிடையே சில குழப்பங்கள் நிலவியது. இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் பி.யூ.சி. படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்படிப்பு மற்றும் பொது நுழைவு தேர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்தும் கற்றுக் கொடுக்கப்படும்.
என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வில் பெங்களூரு உத்தரஹள்ளி, கனகபுரா ரோட்டில் உள்ள கல்லூரியில் படித்த விக்னேஷ் முதல் இடத்தையும், ஜெயநகரில் உள்ள கல்லூரியில் படித்த அர்ஜூன் கிருஷ்ணசாமி 2-வது இடத்தையும், உப்பள்ளியை சேர்ந்த மாணவர் சம்யுத் ஷெட்டி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் உடன் இருந்தார்.