2.61 லட்சம் பேர் எழுதுகிறார்கள்; சி.இ.டி. தேர்வு நடைபெறும் இன்று சித்தராமையா பதவி ஏற்பு விழா
2.61 லட்சம் பேர் எழுதும் சி.இ.டி. தேர்வு இன்று நடைபெறுகிறது. சித்தராமையா முதல்-மந்திரி பதவி விழாவும் இன்று நடப்பதால் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து நெரிசல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
2.61 லட்சம் பேர் எழுதும் சி.இ.டி. தேர்வு இன்று நடைபெறுகிறது. சித்தராமையா முதல்-மந்திரி பதவி விழாவும் இன்று நடப்பதால் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து நெரிசல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சி.இ.டி. தேர்வு
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட பல்வேறு தொழில் படிப்புகளுக்கான சி.இ.டி. நுழைவுத்தேர்வு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்ததேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 562 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 121 மையங்கள் பெங்களூருவில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சுமார் 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
சித்தராமையா பதவி ஏற்பு விழா
இந்த நிலையில் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்பு விழா இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. விழாவில் கர்நாடகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் மாநிலம் முழுவதும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் படையெடுத்து வருவார்கள். இதனால் பெங்களூருவில் இன்று பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் திட்டம் வகுத்துள்ளனர். இருப்பினும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாது.
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக மைசூரு ரோடு, துமகூரு ரோடு, பல்லாரி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
ஏனெனில் முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்பு விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள கல்லூரிகள் தேர்வு மையங்களாக உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் எப்படி தேர்வு எழுத செல்வது என்ற அச்சத்தில் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கவலையில் உள்ளன.
தேர்வாணையம் கடிதம்
இதற்கிடையே கர்நாடக தேர்வாணையமும், பதவி ஏற்பு விழாவால் பெங்களூரு நகரில் எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா என்பது குறித்து ஆலோசனை கேட்டு பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சி.இ.டி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் பெங்களூருவில் போக்குவரத்துகளை மாற்றி அமைத்து மாணவர்கள் இடையூறு இன்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.