திரிபுரா வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு


திரிபுரா வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு
x

Image Courtesy: PTI

மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் மற்றும் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மாநிலத்திற்கு நிதியுதவி அளித்ததற்காக மாணிக் சாகா நன்றி தெரிவித்துள்ளார்

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளத்தால் மொத்தம் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் 1.37 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் சாலைகள், கட்டிடங்கள், மின்கம்பிகள், கரைகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து முக்கிய ஆறுகளிலும் தண்ணீர் குறைந்தாலும், சுமார் 70,000 பேர் இன்னும் 471 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு விரைவில் மத்திய குழுவை அனுப்புவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்-மந்திரி மாணிக் சாகா தெரிவித்துள்ளார். மத்தியக் குழு வரும்போது, வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளின் உண்மை படத்தை மாநில அரசு முன்வைக்கும் என்றார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் மற்றும் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மாநிலத்திற்கு நிதியுதவி அளித்ததற்காக சாகா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "யோகி ஆதித்யநாத் என்னுடன் பேசி வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளார். மேலும் மத்திய பிரதேச அரசும் ரூ.20 கோடியை மறுசீரமைப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளது. இந்த இக்கட்டான காலங்களில் திரிபுராவுக்கு மத்திய அரசு நிச்சயமாக உதவும்" என்றார்.


Next Story