ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோர முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
ஒரே பாலின ஜோடிகள் தங்களது திருமணத்துக்கு அங்கீகாரம் கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒரு ஆணை மற்றொரு ஆணும், ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி-அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆண் ஜோடிகள், தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்து உள்ளன.
இதே போன்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளிலும் நிலுவையில் இருக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டு விசாரணை
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திலாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணையில் உள்ளன.
இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மத்திய அரசு எதிர்ப்பு
இந்த நிலையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நமது நாட்டின் சட்டங்கள்படி, ஒரு பாலின ஜோடிகள் தங்கள் திருமணத்தை அடிப்படை உரிமை என்று கூறி அங்கீகாரம் கோர முடியாது.
* ஒரே பாலின ஜோடிகளின் திருமணம் அங்கீகரிக்கப்படவும் இல்லை. ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை.
* மனித உறவுகள் தொடர்பான அங்கீகாரம் வழங்குவதும், உரிமைகளை வழங்குவதும் சட்டம் இயற்றுவோரின் செயல்பாடு ஆகும். அது ஒருபோதும் நீதித்துறை தீர்ப்பின் பொருளாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்த வழக்கு, முற்றிலும் நிலைத்து நிற்க முடியாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
* நாடாளுமன்றம் திருமண சட்டங்களை வடிவமைத்து இயற்றி இருக்கிறது. இவற்றை தனிப்பட்ட சட்டங்களும், பல்வேறு மதச்சமூகத்தின் சட்டங்களும் நிர்வகிக்கின்றன. இவை ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்தில் இணைவதற்குத்தான் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.