எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்கள்: வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்


எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்கள்: வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
x

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களை வழக்காக பதிவு செய்வதில் தாமதம் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூகத்தில் பலவீனமான பிரிவினரான எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் மீதான குற்றங்களை தடுப்பதில் மத்திய அரசு அக்கறையாக உள்ளது. எனவே, இத்தகைய குற்றங்களை தடுப்பதிலும், விசாரிப்பதிலும் நிர்வாகமும், போலீசும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களை வழக்காக பதிவு செய்வதில் தாமதம் செய்யக்கூடாது. குற்றங்கள் பற்றி புகார் அளிக்கப்படாமல் இருந்துவிடக்கூடாது.

வழக்குப்பதிவு செய்ததில் இருந்து 2 மாதங்களை தாண்டி விசாரணை நடந்து கொண்டிருந்தால், அந்த விசாரணையை உன்னிப்பாக கண்காணித்துவர வேண்டும். விசாரணை நிலவரத்தை மாவட்ட, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். விசாரணையை விரைவுபடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டை நியமிக்கலாம்.

மாதந்தோறும் மாவட்ட செசன்சு நீதிபதி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், இந்த விசாரணை நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும். அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில், முழுமையான போலீஸ் கட்டமைப்புடன் போதிய போலீசாரை நியமிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களின் வழக்கு விசாரணையை விரைவாக நடத்துவதுடன், அரசுத்தரப்பு சாட்சிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story