அரசு பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் 180 நாள் பேறுகால விடுப்பு


அரசு பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் 180 நாள் பேறுகால விடுப்பு
x

கோப்புப்படம்

வாடகைத்தாய், அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

தற்போது, அரசு ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் தங்களது ஒட்டுமொத்த பணிக்காலத்தில் மொத்தம் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது. முதல் 2 குழந்தைகளை வளர்க்கவும், கல்வி, உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்காக கவனித்துக் கொள்ளவும் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க விதிமுறைகள் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், 1972-ம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (விடுமுறை) விதிமுறைகளில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திருத்தங்கள் செய்துள்ளது. இந்த திருத்தங்கள், அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும். 2 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால்தான் அவர்கள் இச்சலுகையை பெற முடியும். குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகைத்தாய், அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் 15 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும் என்றும் திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.


Next Story