பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை


பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை
x

மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் மக்கள் என அனைவரும் பெண் டாக்டரை அவர்களுடைய மகளாகவே பார்க்கிறார்கள் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

அவர்களை பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டம் தொடரும் என நேற்று மாலை அவர்கள் அறிவித்தனர். தொடர்ந்து பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? என்பது பற்றி பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, இந்த வழக்கில், முதல்-மந்திரியின் (மம்தா பானர்ஜி) பணியில் எங்களுக்கு திருப்தி இல்லை.

அதனாலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரினோம். அவர் (மம்தா பானர்ஜி), எந்த வேலையையும் செய்யவில்லை. போலீசாரில் ஒருவர் வீட்டுக்கு வந்து, சஞ்சய் ராயை நாங்கள் கைது செய்து விட்டோம். அவரை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மரண தண்டனை பெற்று தருவோம் என்றார்.

ஆனால், இந்த வழக்கில் தொடர்புடையவர் ஒருவர் மட்டுமே இல்லை. துறையில் உள்ள பல நபர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர் என தொடக்கத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம் என்றார்.

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி மக்களுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தது பற்றி பெண் டாக்டரின் தந்தை கூறும்போது, அவர் அழைப்பு விடலாம். ஆனால், இந்த ஆண்டு துர்கா பூஜையை ஒருவரும் கொண்டாடமாட்டார்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

சிலர் கொண்டாடினாலும், அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடமாட்டார்கள். ஏனெனில், மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் மக்கள் என அனைவரும் பெண் டாக்டரை அவர்களுடைய மகளாகவே பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் பேசும்போது, துர்கா பூஜை நெருங்குகிறது. மக்கள் திருவிழா கொண்டாட்டத்திற்கு திரும்புங்கள். இளநிலை மருத்துவர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பெண் டாக்டரின் தாயார், துர்கா பூஜை என்னுடைய வீட்டில் கூட கொண்டாடப்படும். அதனை என்னுடைய மகள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், துர்கா பூஜை மீண்டும் என்னுடைய வீட்டில் ஒருபோதும் கொண்டாடப்போவது இல்லை. வீட்டில் இருந்த வெளிச்சம் வெளியேறி விட்டது. திருவிழா கொண்டாட வரும்படி நான் எப்படி மக்களை கேட்டு கொள்ள முடியும்? என கேட்டுள்ளார்.

முதல்-மந்திரியின் குடும்பத்தில் இதுபோன்ற சம்பவம் ஏதும் நடந்திருந்தால், அவர் இப்படி கூறுவாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீதி வழங்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.


Next Story