சி.பி.ஐ. அமைப்பை என்னிடம் கொடுங்கள்; 2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி.


சி.பி.ஐ. அமைப்பை என்னிடம் கொடுங்கள்; 2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி.
x

சி.பி.ஐ., அமலாக்க துறை என்னிடம் இருந்தால் 2 மணிநேரத்தில் மோடி, அமித்ஷா, அதானியை கைது செய்வேன் என போலீசாரால் விடுவிக்கப்பட்ட எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார். இதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிசோடியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது.

எனினும், சி.பி.ஐ. அமைப்பின் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், திரிலோக் புரி எம்.எல்.ஏ. ரோகித் குமார் மெஹ்ராலியா, சங்கம் விஹார் எம்.எல்.ஏ. தினேஷ் மோனியா, கொந்தில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங், ரோதாஷ் நகர் முன்னாள் எம்.எல்.ஏ. சரிதா சிங் மற்றும் டெல்லி மந்திரி கோபால் ராய் உள்ளிட்டோர் சி.பி.ஐ. தலைமையகம் அமைந்துள்ள சி.ஜி.ஓ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக போலீசார் மொத்தம் 50 பேரை கைது செய்தனர். அவர்களில், 42 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள் ஆவர் என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்த பகுதியில், கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு குவிப்பது உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன என்று டெல்லி போலீசார் கூறினர். 8 மணிநேர விசாரணைக்கு பின் சிசோடியாவை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்தது. தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோரை போலீசார் இன்று விடுவித்து உள்ளனர். இதன்பின்னர், செய்தியாளரிடம் பேசிய சஞ்சய், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.

கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சிக்கு ஒரு கெட்ட பெயர் உண்டாக வேண்டும் என மேற்கொள்ளும் பா.ஜ.க.வின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடியும்.

பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். நாட்டில் மிக பிரபலம் வாய்ந்த கல்வி மந்திரியை (மணிஷ் சிசோடியா) அவர் கைது செய்து உள்ளார்.

விசாரணை முகமைகளை கொண்டு சிசோடியா கைது செய்யப்பட்டு இருப்பது மத்திய அரசின் கோழைத்தன செயல். என்னுடன் சி.பி.ஐ. அமைப்பு மற்றும் அமலாக்க துறை ஆகியன இருந்தால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தொழிலதிபர் அதானியை 2 மணிநேரத்தில் கைது செய்வேன்.

விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தும் அதிகாரம் உங்களிடம் இருந்தால், நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் என சிங் நிருபர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.

இதேபோன்று, டெல்லி மந்திரி கோபால் ராய் கூறும்போது, எங்களுடைய அனைத்து மந்திரிகளையும் பா.ஜ.க. கைது செய்தபோதும், பாதிப்பின்றி தொடர்ந்து அரசு அதன் வழியில் செயல்படும் என கூறியுள்ளார்.


Next Story