தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்


தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா, தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 103-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில நிர்வாகிகளும் அவர்களது தலைமையிடத்தில் இருந்து கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான ஆர்.தயாளகுமார் திருச்சியில் இருந்தும், பிற அதிகாரிகள் சென்னையில் இருந்தும் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் 4 மாநில நீர் தரவு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தண்ணீர் வினியோகம் பற்றி பேசும்போது, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் தரவேண்டிய 98.633 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 191.660 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு உறுப்பினர் தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில் காவிரிப்படுகையில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது என்றும், ஆனால் அடுத்த 2 வாரத்துக்கு இயல்பைவிட குறைவாகவே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத்துறை அதிகாரி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு உறுப்பினர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வருகிற மாதங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பிலிகுண்டுலுவில் திறந்து விடுவதை கர்நாடகம் உறுதி செய்ய பரிந்துரைக்க வேண்டும் என கேட்டார். அதுபோல செய்யுமாறு குழு தலைவர் வினீத் குப்தா கர்நாடக அதிகாரிகளை வலியுறுத்தினார்.


Next Story