காவிரி விவகாரம்: தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது - முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. இரு மாநிலங்கள் இடையே நிலவும் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு. ஆனால் இதற்கு மத்திய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கவில்லை. மேகதாது திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மத்திய அரசு கூற வேண்டும். ஆனால் மத்திய அரசு அதனை செய்யவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜனதாவினர் காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால், தற்போது காவிரி விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்து வருகிறார்கள்.
வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது கர்நாடகத்தின் உண்மை நிலையை அரசு எடுத்து வைக்கும். இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.