போதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை
எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.
வயல்வெளியில் விழுந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட பையில் இருந்து 450 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது. இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
இதேபோல் 9 ஆம் தேதி அன்று பெரோஸ்பூர் மாவட்டத்தில் பறந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.