நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
அதானி விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன் மூலம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைந்தது.
மக்களவை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகாரை எழுப்பி, எதிர்க்கட்சிகள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வந்தன.
இந்தநிலையில், நேற்று மக்களவை கூடியது. கேள்வி நேரம் முழுமையாக நடந்தது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி உறுப்பினர்கள் பேசினர்.
பின்னர், ஏற்கனவே எடுத்த முடிவின்படி, மக்களவை மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கும்.
மாநிலங்களவை
மாநிலங்களவை கூடியவுடன், சபையில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதை ஏற்று, கார்கேவை சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேச அனுமதித்தார். இருப்பினும், கார்கே பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். கார்கேவின் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து ஜெகதீப் தன்கர் நீக்கினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கேளுங்கள்
பின்னர், காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி எழுந்து, காங்கிரஸ் எம்.பி. ரஜினி பட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தினார்.
அதற்கு அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் கூறியதாவது:-
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திரும்ப திரும்ப அமளியில் ஈடுபடுகின்றனர். இது, மாநிலங்களவைக்கு இழுக்கு. பிரதமர் மோடி பதிலுரையின்போது நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, சபை காலை 11.50 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சபை கூடியபோது, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினர். உடனே, எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ரஜினி பட்டீல் எம்.பி. இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமளியில் ஈடுபட்டனர்.
அமைதியாக இருக்குமாறு சபைத்தலைவர் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் திட்டமிட்டு அமளியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
''எம்.பி.க்கள் அமளியால் எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. விலைமதிப்பில்லாத நேரம் வீணாகி வருகிறது. சபையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. மக்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை'' என்று அவர் கூறினார்.
ஒத்திவைப்பு
இருப்பினும், எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சபையை மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
இதன் மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைந்தது. முதல் பகுதியில், பட்ஜெட் தாக்கல், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடியின் பதிலுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.