குழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்; ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிசேகரன் பேச்சு
குழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிசேகரன் கூறினார்.
பெங்களூரு:
குழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிசேகரன் கூறினாா.
தமிழ் புத்தக திருவிழா
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரிகள் ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தமிழ் புத்தக திருவிழா தொடக்க விழா கடந்த 25-ந்தேதி பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் 25 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிகமாக தமிழ் புத்தகங்களே இடம்பெற்றுள்ளன. அனைத்து வகையான புத்தகங்களும் இருக்கின்றன. சிறுவர்கள், சிறுமிகளுக்கான புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரொக்க பரிசு
ஒவ்வொரு நாளும் சிந்தனைக்களம் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வருகை தந்து தங்களின் கருத்துகளை பகிா்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமின்றி புத்தகம் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்த புத்தக திருவிழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. நேற்று "சிம்புட் பறவையே சிறகை விரி" என்ற பெயரில் கட்டுரை போட்டி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெரியவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த கட்டுரை போட்டியில் முதல் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய தமிழ் புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
அனுபவம் கிடைத்தது
நான் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோரின் கவிதை புத்தகங்களை படித்துள்ளேன். நான் பாரதிதாசனின் மிகப்பெரிய ரசிகன். அவர் பெண் கல்வியை வலியுறுத்தினார். பெண்கள் படிக்க வேண்டும் என்பதை ஆழமாக கூறினார். படித்த பெண்கள் இருக்கும் குடும்பம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு கல்வி அவசியம்.
எனது தந்தை எங்களை நன்கு படிக்க வைத்தார். நாங்கள் உயர் அதிகாரிகளாக வர வேண்டும் என்று விரும்பினார். அதனால் நான் படித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கிறேன். குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு எதிர்கொண்டால், அதற்கு தீர்வுகளை அவர்கள் கண்டறிவார்கள். அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்வது மிக முக்கியம். எனக்கு 24 வயதில் மிகப்பெரிய அளவில் அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவம் இன்று வரை எனக்கு உதவுகிறது.
தமிழில் பேசுகிறேன்
நான் பெங்களூருவுக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று (நேற்று) தான் முதல் முறையாக ஒரு மேடையில் தமிழில் பேசுகிறேன். இதுவரை தமிழில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்ச்சங்கத்தில் முதல் முறையாக நான் கால் வைக்கிறேன். தமிழ்ச்சங்கத்தினர் என்னை அழைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. நான் பெங்களூருவில் போலீஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். இறைவன் அருளால் எனக்கு இந்த பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் என்னை தேடி உதவி கேட்டு வந்த பலருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்தேன். தமிழ்ச்சங்கத்தில் இருந்து கூட பலா் என்னை வந்து சந்தித்தனர்.
இவ்வாறு ஹரிசேகரன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மென்பொருள் என்ஜினீயர்கள் கலந்து கொண்டு தங்களின் பறை மேளங்களை அடித்து திறனை வெளிப்படுத்தினர்.
இன்றைய நிகழ்ச்சி
தமிழ் புத்தக திருவிழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இலக்கிய தேன்சாரல் அமைப்பின் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் தமிழ் ஒலி தொலைக்காட்சியின் தலைவர் தமிழரசன் வரவேற்புரை ஆற்றுகிறார். ராஜேந்திரபாபு தலைமை தாங்குகிறார். "தமிழும் நானும்'' ஜெய்சக்தி, "தமிழும் இன்றைய இளைஞர்களும்'' தனம், வேளாங்கண்ணி, ''தமிழும் அறிவியலும்'' ஹரீஷ் சின்னராஜ், ''தமிழும் கலைகளும்'' கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடக்கும் சிந்தனை களத்திற்கு அப்துல் கலாமின் பேத்தியும், கர்நாடக ஐகோர்ட்டு வக்கீலுமான நாகூர் ரோஜா தலைமை தாங்குகிறார்.