காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்றது: கர்நாடக முதல் மந்திரி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை "பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்றது" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

தேர்தல் போட்டியில் காங்கிரஸ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:- காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற முடிவு. காங்கிரஸ் அவநம்பிக்கையில் உள்ளதால் அவர்கள் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள். காங்கிரஸிடமிருந்து இதுபோன்ற பல அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விரக்தியின் காரணமாக மக்கள் அதிகமாக இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது. மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிக்கு இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்குப் புதியவர் என்பதால், இதே அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். காங்கிரஸ் அரசு ஆறு மணி நேரம் (ஒரு நாளைக்கு) தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறியபோது, அவர்களால் எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.