பொறுப்புணர்வுடன் வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டும்- மும்பை ஐகோர்ட்டு கருத்து


பொறுப்புணர்வுடன் வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டும்- மும்பை ஐகோர்ட்டு கருத்து
x

பொறுப்புணர்வுடன் வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை கூறியுள்ளது.

மும்பை,

வாசிம் மாவட்டம், மோர்சி கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் (வயது27). இவர் கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்அப்பில் பதிவு (ஸ்டேடஸ்) வைத்து இருந்தார். வாலிபருக்கு தெரிந்த கணேஷ் (26) என்பவர் அந்த பதிவை பார்த்தார். அதில் பிற மதத்தினரை புண்படுத்து வகையில் கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன. இதுதொடர்பாக கணேஷ் வாசிம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கிஷோர் மீது வன்கொடுமை, வேண்டும் என்றே பிற மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கிஷோர் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். மனுவில், " எனது வாட்ஸ்அப் பதிவை நான் செல்போனில் சேமித்து வைத்து உள்ள தொடர்பு எண் நபர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். எனவே நான் மற்ற மதத்தினரை காயப்படுத்தும் வேண்டும் என்ற நோக்கத்தோடு வாட்ஸ்அப்பில் பதிவு வைக்கவில்லை. வெறுப்பை பரப்ப வேண்டும் என்பது எனது நோக்கமல்ல " என கூறியிருந்தார்.

மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினய் ஜோஷி, வால்மீகி மெனசஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், " நாம் செய்யும், நினைக்கும் விஷயங்களை வாட்ஸ்அப் பதிவில் வீடியோ, படமாக வைக்க முடியும். அது 24 மணி நேரத்தில் மறைந்துவிடும். நம்முடன் தொடர்பில் உள்ளவர்களிடம் எதையாவது பகிர்ந்து கொள்ள தான் வாட்ஸ்அப் பதிவு வைக்கப்படுகிறது.

அது தெரிந்தவர்களுக்கு தகவலை பரிமாறிக்கொள்வதை தவிர வேறு எதுவும் அல்ல. தற்போது மக்கள் மற்றவா்களின் வாட்ஸ்அப் பதிவை பார்க்கிறார்கள். எனவே மற்றவர்களிடம் எதையாவது தெரிவிக்கும் போது ஒருவர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். " என கூறி வாலிபருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.


Next Story