கேரளாவில் குண்டுவெடிப்பு; விடுப்பில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வர சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை மாநில மந்திரிகள் பலர் பார்வையிட்டனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாநில அனைத்து கட்சி கூட்டத்தையும் இன்று(திங்கட்கிழமை) நடத்துகிறார்.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் விடுப்பில் உள்ள அரசு டாக்டர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.