இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் - கேரள மந்திரிகள் நேரில் அஞ்சலி


இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் - கேரள மந்திரிகள் நேரில் அஞ்சலி
x

கேரள மந்திரிகள் நேரில் வந்து, நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மூணாறு,

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குடையாந்தூரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் அப்படியே புதைந்து போனது. அப்போது அந்த வீட்டிற்குள் இருந்த விவசாயியான சோமன், அவரது தாய் தங்கம்மாள், மனைவி சிஜி, மகள் சீமா, பேரன் அபிதேவ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து மண்ணில் புதைந்த சோமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் சோமன் உள்பட 5 பேரின் உடல்களும், குடையாந்தூருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து சோமனின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பலியானவர்களின் உடல்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே கேரள மாநில வருவாய்த்துறை மந்திரி ராஜன், நீர்ப்பாசன துறை மந்திரி ரோஸி அகஸ்டின், இடுக்கி எம்.பி. டீன் குரியா கோஸ் ஆகியோர் நேரில் வந்து, நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 5 பேரின் உடல்களும் குடையாந்தூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story