பாஜகவில் இணைந்த பரூக் அப்துல்லா கட்சி நிர்வாகிகள்
மோடி அரசின் மீது நம்பிக்கை வைத்து, பாஜகவின் சின்னத்தை மக்கள் பெரிதும் மதிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள், பீகார் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கிய தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
நேற்று நடந்த அணிமாற்றத்தின் அதே நாளிலேயே இந்தியா கூட்டணியில் உள்ள தேசியமாநாட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் கத்துவா மாவட்ட தலைவர் சஞ்சீவ் கஜுரியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சேர்ந்தனர். இதன் இணைப்பு விழா காஷ்மீர் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா வரவேற்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
மோடி அரசின் மீது நம்பிக்கை வைத்து, பாஜகவின் சின்னத்தை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிநபரின் நலனுக்காக பாஜக பாடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலன் பேணும் அரசாக உள்ளது. அவரது திட்டங்கள், அனைத்து மக்களையும் சென்று பலன் அளிக்கிறது. இது என்னை கவர்ந்தது என அக்கட்சியில் சேர்ந்த கஜுரியா கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்ததால் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக்அப்துல்லா கவலை அடைந்துள்ளார்.