மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும் - உத்தவ் தாக்கரே
பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான "சாம்னா"வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய மக்கள் தங்கள் தலைவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். தற்போதைய மோடி அரசு தோற்கடிக்கப்பட்டால் தான் நாட்டின் எதிர்காலம் அமைதியாக இருக்கும், ஜனநாயகம் செழிக்கும். ஆனால் மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும்.
ஊழல்வாதிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். அனைத்து தூசி மற்றும் அழுக்கை உறிஞ்சும் ஒரு வேக்யூம் கிளீனரை போல பா.ஜனதா கட்சி அனைத்து ஊழல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்த்துக்கொள்கிறது.
ஆனால் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை நீக்கி சுத்தப்படுத்தி வருகின்றன. பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் இந்தியாவை பற்றி பேசும் போது, பிரதமர் மோடி மட்டும் பாகிஸ்தானை பற்றி தான் அதிகம் பேசுகிறார்.
மேலும் நாட்டின் வளர்ச்சி பணிகளை கூற ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு எதுவும் இல்லாததால், தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா ராமரை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.