பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி
நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
மஜூலி,
மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை, நாகாலாந்து மாநிலத்தை கடந்து நேற்று முன்தினம் அசாமில் நுழைந்தது. அங்கு நேற்று 2-வது நாளாக தனது யாத்திரையை அவர் தொடர்ந்தார். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஆற்றுத்தீவு மாவட்டமான மஜூலியில் நடைபயணம் சென்ற அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பெற்றவாறு அவர் உற்சாகமாக யாத்திரையை தொடர்ந்தார்.
இதற்கிடையே மஜூலியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அப்போது பழங்குடியினரின் நலனில் அக்கறை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளை கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
உங்களை நாங்கள் 'ஆதிவாசி' என அழைக்கிறோம். முதல் குடிகள் என்பதே அதன் பொருள். முதல் குடிகளாக வளங்கள் மீதான ஆதிவாசிகளின் உரிமைகளை காங்கிரஸ் அங்கீகரிக்கிறது. ஆனால் பழங்குடியினரை வனவாசி என்று பா.ஜனதாவினர் அழைக்கிறார்கள். அதற்குப்பொருள், காடுகளில் வாழ்பவர்கள் என்பதாகும்.
இதன் மூலம் பழங்குடி மக்களை காடுகளுக்குள்ளேயே அடைத்து, அவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதையும், ஆங்கிலம் கற்பதையும், வர்த்தகம் செய்யும் வாய்ப்புகளையும் பறிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது.
உங்களுக்குரியதை உங்களுக்கு திருப்பி அளிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் குடிநீர், நிலம், காடு போன்றவை உங்களுக்குரியதாக இருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதா அரசோ நாடு முழுவதும் பழங்குடியினரின் நிலங்களை பறித்து வருகிறது. உங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் நிலம் பறிக்கப்படுகிறது. உங்கள் வரலாறு அழிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் நடக்கிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட இந்திய ஒற்றுமைப்பயணம் வெற்றியடைந்தது. இதைப்போல கிழக்கு முதல் மேற்கு வரை மற்றொரு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். எனவே நாங்கள் மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் தொடங்கி இருக்கிறோம். இது பா.ஜனதாவின் சித்தாந்தங்களுக்கு எதிரான ஒரு போராட்டம் ஆகும்.
மணிப்பூரை பா.ஜனதா எரித்து விட்டது. அங்கு மாதக்கணக்கில் சிவில் போர் போன்ற நிலைமைதான் நீடிக்கிறது. மக்கள் ஒருவரையொருவர் கொன்று வருகின்றனர். ஆனால் பிரதமர் ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இங்குள்ள (அசாம்) முதல்-மந்திரி மிகப்பெரிய ஊழல்வாதியாக இருக்கிறார்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.