நுபுர் சர்மாவை போல் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கைது!
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக ஏராளமான இஸ்லாமியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோஷாமால் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் என்பவர், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியிலொ பங்கேற்க வந்த மேடை நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், நுபுர் சர்மாவை போல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து கூறிய சில அவதூறான விஷயங்களை பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மீண்டும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீது முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக இன்று காலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. ராஜா சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜங்கவுன் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டார்.
"நான் எந்த குறிப்பிட்ட சமூகத்தின் பெயரையும் பயன்படுத்தாததால், எந்த அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர் என்பது எனக்குப் புரியவில்லை. எனது வீடியோ பரூக்கியை இலக்காகக் கொண்டது.
நான் வீடியோவில் கூறிய வார்த்தைகளில் உறுதியாக நிற்கிறேன். ஆனால், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை. இது வீடியோவின் முதல் பகுதி மட்டுமே, இரண்டாவது வீடியோவும் விரைவில் வரும்" என்று தன் மீதான புகார் குறித்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் விளக்கம் அளித்தார்.