பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்: சுஸ்மா சுவராஜின் மகள் உள்பட டெல்லியில் 4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
முதல்கட்ட பட்டியலில் மத்திய மந்திரிகள் 34 பேர், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் மந்திரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
புதுடெல்லி,
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முதல்கட்ட பட்டியலில் மத்திய அமைச்சர்கள் 34 பேர், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 28 பெண் வேட்பாளர்கள், 47 இளம் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள்.
பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் டெல்லியில் 4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
- சாந்தினி சவுக் தொகுதி: பிரவீன் கண்டேல்வல்
- தெற்கு டெல்லி: ராம்வீர் சிங் பிதுரி
- புதுடெல்லி தொகுதி: பன்சுரி ஸ்வராஜ்
- மேற்கு டெல்லி: கமல்கிட் ஷெராவத்
- வடகிழக்கு டெல்லி தொகுதி: மனோஜ் திவாரி(ஏற்கனவே போட்டியிட்டவர்)
ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதில் 4 பேர் புதுமுக வேட்பாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக பன்சுரி ஸ்வராஜ் மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் மகள் ஆவார். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக சுஷ்மா சுவராஜ் மகள் உள்ளார். டெல்லியில் இருந்து போட்டியிட்ட மத்திய மந்திரி மீனாட்சி லெகி மற்றும் ஹர்ஷவர்த்தனுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.