பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் 11 பேரும் ஜெயிலுக்கு போகவேண்டும்: தீர்ப்பு முழு விவரம்


பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் 11 பேரும் ஜெயிலுக்கு போகவேண்டும்: தீர்ப்பு முழு விவரம்
x

குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பதால், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

புதுடெல்லி:

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

குற்றவாளிகளை விசாரித்து தண்டனை விதிக்கும் மாநிலம்தான் குற்றவாளிகளின் மன்னிப்பு தொடர்பான மனுவை விசாரிப்பதற்கு தகுதியுடையது. இந்த வழக்கை மராட்டிய மாநிலம் விசாரித்தது. மற்ற பிரச்சினைகளுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பதால், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில், குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படவேண்டிய உத்தரவு ஆகும்.

குற்றவாளிகளின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்படி 2022-ம் ஆண்டு மே 13-ம் தேதி நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு பிறப்பித்த உத்தரவும் செல்லாது.

அதாவது, அந்த உத்தரவு, அதிகாரங்களை அபகரிப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை மீறுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து நிவாரணம் அளிப்பதற்கான குஜராத் அரசின் உத்தரவுகளை ரத்து செய்கிறோம். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்கு செல்ல வேண்டும். சிறை அதிகாரிகளிடம் சரண் அடையவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு பின்னணி:

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரும், கருணை அடிப்படையில் குஜராத் அரசாங்கத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story