பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு


பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
x

பில்கிஸ் பானு வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 17-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப்ரவரி 28-ந்தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்குச் சென்றார்.

அப்போது 21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பினியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தது. 2002 மார்ச் 3-ந்தேதி பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஷபர்வாட் என்ற கிராமத்தை அடைந்த போது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக்கொன்ற அந்த கும்பல் கர்ப்பினியான பில்கிஸ் பானு, அவரது தாயார், மேலும் 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவும், ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி யு.டி.சல்வி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான ரதீஷம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நய், கேஷ்பாய் வேதன்யா, பகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நய், மிதீஷ் பட், பிரதீப் மோதியா ஆகிய 11 குற்றவாளிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசு தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சில பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறைக்கு முன்பு இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சில குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடியவில்லை என்றும் குறிப்பாக ஒருவரது வீடு மூடப்பட்டிருப்பதாகவும் அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் குறித்த விளம்பரத்தை குஜராத் உள்ளூர் செய்தித்தாள்களில் குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜூலை 17-ந்தேதிக்கு(திங்கட்கிழமை) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story