பீகார்: வாலிபரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கம்


பீகார்:  வாலிபரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கம்
x

கோப்புப்படம்

டாக்டர் அமித் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதில் முதலில், சாவி வளையம் ஒன்று நீக்கப்பட்டது.

பாட்னா,

பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மோதிஹாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வாலிபரை சிகிச்சைக்காக அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

இதுபற்றி டாக்டர் அமித் குமார் கூறும்போது, அந்த வாலிபருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், அவருடைய வயிற்றில் உலோக பொருட்கள் உள்ளன என தெரிய வந்தது.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவானது. இதனை தொடர்ந்து, டாக்டர் அமித் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் முதலில், சாவி வளையம் ஒன்று நீக்கப்பட்டது.

இதன்பின்னர், 2 சாவிகள், 4 அங்குலம் நீளமுள்ள கத்தி ஒன்று மற்றும் 2 நகவெட்டிகளும் அவருடைய வயிற்றில் இருந்து நீக்கப்பட்டன. இந்த விவரம் அறிந்து, அவருடைய குடும்பத்தினர் மற்றும் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அந்த வாலிபரிடம் கேட்டபோது, சமீப காலங்களாக உலோக பொருட்களை விழுங்க தொடங்கியிருக்கிறார் என தெரிய வந்தது. அவர் இதுபற்றிய விவரங்களை டாக்டர் குழுவினரிடம் கூறியுள்ளார். அவருடைய நிலைமை சீராக உள்ளது. உடல்நலம் தேறி வருகிறது என டாக்டர் அமித் கூறியுள்ளார்.

அவருக்கு சில மனநல பாதிப்புகளும் இருக்கின்றன. அதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர் அமித் கூறியுள்ளார்.


Next Story