அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது - தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிதிஷ் குமார் வாழ்த்து
அத்வானியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், தொலைபேசி மூலம் அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பீகார் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், "நாட்டின் வளர்ச்சிக்காகவும், தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் அத்வானி தனது நீண்ட கால பொதுவாழ்வில் ஆற்றிய பங்கு இன்றியமையாதது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் அத்வானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்வானியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், அண்மையில் எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.