பெங்களூரு மாநகராட்சி முறைகேடு ஆவணங்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய நேரத்தில் ஆவணங்களை வெளியிடுவேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு அவசரம் இல்லை
பெங்களூரு மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆவணங்களை வெளியிடுவதாக குமாரசாமி கூறியுள்ளார். அவரிடம் இருக்கும் தகவல்களை வெளியிட வேண்டும். குமாரசாமி அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை. தகவல்கள் இருந்தால் வெளியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் அவருடன் மோத மாட்டேன்.
கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதை குமாரசாமியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதிகாரம் கிடைக்கவில்லையே என்று அவர் வருத்தப்படுகிறார். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய நேரத்தில் ஆவணங்களை வெளியிடுவேன். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள். எனக்கு அவசரம் இல்லை.
கனவு காண வேண்டாம்
விசாரணை அறிக்கை எனக்கு கிடைத்ததும் எல்லா விவரங்களையும் வெளியிடுகிறேன். 6 மாதங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ளார். சிலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனவு காண வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். 5 உத்தரவாத திட்டங்களில் மூன்று திட்டங்களை ஏற்கனவே அமல்படுத்திவிட்டோம்.
முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் குறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அதனால் அஸ்வத் நாராயண் பயந்துபோய் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் இன்னும் அந்த கொள்கையை அமல்படுத்தவில்லை.
தேசிய கல்வி கொள்கை
அவர்களுக்கு கர்நாடகத்தின் மீது இந்த கவனம் ஏன்?. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை எங்களுக்கு தேவை இல்லை. அதனால் அதை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.