பெங்களூருவில் குடிக்க, கைகழுவ கூட தண்ணீர் இல்லை - பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு


பெங்களூருவில் குடிக்க, கைகழுவ கூட தண்ணீர் இல்லை - பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு
x
தினத்தந்தி 8 March 2024 12:23 AM IST (Updated: 8 March 2024 6:00 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு,

இந்திய மென்பொருள் உற்பத்தியின் தலைநகரமாக திகழும் பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால், அதனை பயன்படுத்தி வந்தவர்கள் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புறநகர் பகுதிகளில் தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. குடிக்க, கைகழுவ கூட தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.

பெங்களூரு நகரில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் டேங்கர் லாரிகள் அதிகளவில் தென்படுகின்றன. வழக்கமான நாட்களில் தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story