பசவராஜ் பொம்மையுடன் பெங்களூரு காண்டிராக்டர்கள் சந்திப்பு


பசவராஜ் பொம்மையுடன் பெங்களூரு காண்டிராக்டர்கள் சந்திப்பு
x

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூரு மாநகராட்சி காண்டிராக்டர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி காண்டிராக்டா்கள் சங்கத்தினர், தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை விடுவிக்குமாறு கோரினர். ஆனால் மாநில அரசு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோபம் அடைந்துள்ள அந்த காண்டிராக்டர்கள், நிலுவைத்தொகையை விடுவிக்க துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் 15 சதவீதம் கமிஷன் கேட்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அவர்கள் அதற்கு முன்பு குமாரசாமி, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, தாங்கள் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறினர். தங்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாநகராட்சி கண்டிராக்டர்கள் சங்கத்தினர் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது அரசிடம் இருந்து தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்க குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஆன்லைனில் காண்டிராக்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தோம். மூப்பு அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்யபபட்டது. முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு தற்போது லஞ்சம் கேட்பதாக அவர்கள் கூறினர். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மவுனம் காக்கிறார். இதன் மூலம் ஊழலுக்கு அவரும் துணை போகிறாா்.

காங்கிரஸ் மேலிடம் ஊழலை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது. காண்டிராக்டர்கள் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் கருத்தை பதிவிட்டு இங்கு 65 சதவீத கமிஷன் கேட்பதாக கூறியுள்ளனர். அதனால் 24 மணி நேரத்தில் காண்டிராக்டர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க அவர் உத்தரவிட வேண்டும். டி.கே.சிவக்குமார் 'சூப்பர் சி.எம்.' போல் செயல்படுகிறார். இந்த அரசுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டு வந்தாலும் அது போலியானது என்று சொல்கிறார்கள். இது ஒரு போலி அரசு.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story