பெங்களூரு: உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரொக்கமாக பணத்தை கொண்டு செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள சிட்டி மார்கெட் பகுதியில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2 நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த பணம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால், உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கர்நாடகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.