பணம் வந்ததால் உயிர் பயமும் வந்தது: ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன் வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம் கேரளாவில் பரபரப்பு
கேரளாவில் உயிருக்கு பயந்து ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன் வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள லாட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்தால் இப்போது யாரும் தங்களது பெயர், விவரங்களை வெளியிடுவதில்லை. பணம் கேட்டு உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் தொல்லை கொடுப்பது தான் இதற்கு காரணம். கடந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்த ஆட்டோ டிரைவரான அனூப் என்பவர் தனது உறவினர்கள், நண்பர்களின் தொல்லை தாங்க முடியாமல் பல மாதங்கள் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு லாட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைப்பவர்கள் தங்களது பெயர், விவரங்களை வெளியிட விரும்புவதில்லை.
இந்த நிலையில் கேரள லாட்டரியில் முதல் பரிசு ரூ.1 கோடி கிடைத்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கேரள அரசின் பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசுத்ெதாகையான ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிர்ஷு ராபாவுக்கு (வயது 36) கிடைத்தது.
வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகை தனக்கு கிடைக்கும் என்று ராபா கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இதனால் பரிசு விழுந்த விவரம் தெரிந்தவுடன் அவரது நண்பர்கள் உள்பட பலரும் அவரை சந்திக்க வரத் தொடங்கினர்.
இதனால் அவருக்கு திடீரென பயம் வரத்தொடங்கியது. பணத்திற்காக தன்னை யாராவது கொலை செய்து விடுவார்களோ? என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.
இதனால் அவர் போலீசின் உதவியை நாட முடிவு செய்தார். உடனே திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இன்ஸ்பெக்டரை சந்தித்து, லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான டிக்கெட் தன்னிடம் இருப்பதால் பணத்திற்காக யாராவது கொலை செய்து விடுவார்களோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பயப்பட வேண்டாம் என்று ராபாவுக்கு ஆறுதல் கூறிய போலீசார், உடனடியாக வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து டிக்கெட்டை அவர்களிடம் ஒப்படைக்க வைத்தனர். இதன் பிறகு தான் ராபாவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
லாட்டரியில் கிடைக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி ராபாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.