ராமர் கோவில் கருவறை உள்ளே அழகிய சிற்பங்கள்; புகைப்படங்கள் வெளியீடு


ராமர் கோவில் கருவறை உள்ளே அழகிய சிற்பங்கள்; புகைப்படங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 10 Dec 2023 4:54 PM IST (Updated: 9 Jan 2024 3:07 PM IST)
t-max-icont-min-icon

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

அயோத்தியா,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

கடவுள் ராமரின் சிலை வைக்கப்பட கூடிய கருவறையில் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்த சூழலில், ராமர் கோவிலின் உட்புறம் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் அடங்கிய புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இன்று வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொது செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, மின் விளக்குகள், இணைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து உள்ளன. நான் சில புகைப்படங்களை உங்களுக்கு பகிர்கிறேன் என எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.

கடந்த அக்டோபரில், கோவிலின் தரை பகுதியில் விலையுயர்ந்த கற்களை கொண்டு பதித்து, அழகுப்படுத்திய பணிகள் அடங்கிய புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன.

ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை, வருகிற ஜனவரி 22-ந்தேதி நண்பகல் மற்றும் மதியம் 12.45 மணிக்கு இடையே நிறுவுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.


Next Story