சிகாரிப்புராவில் மகன் போட்டுயிடுவதாக அறிவிப்பு: எடியூரப்பாவுடன், பசவராஜ் பொம்மை சந்திப்பு
தான் போட்டியிட்ட சிகாரிப்புரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்துள்ள நிலையில் அவரை முதல்-மந்திரி மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென சந்தித்து பேசினார்.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை சந்திப்பு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா. இவர் நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும், தோ்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்றும் எடியூரப்பா அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, எடியூரப்பாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வருவாய்த்துறை மந்திரி அசோக்கும் உடன் இருந்தார். அப்போது சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்திருப்பது குறித்து எடியூரப்பாவுடன், பசவராஜ் பொம்மை ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு முடிந்த பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தொகுதி மக்கள் அழுத்தம்
நானும், வருவாய்த்துறை மந்திரியுமான அசோக்கும் எடியூரப்பாவை சந்தித்து பேசினோம். சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்றும், விஜயேந்திரா அடுத்த சட்டசபை தோ்தலில் போட்டியிடுவார் என்றும் எடியூரப்பா அறிவித்திருந்தார். இதுபற்றியும், வளர்ச்சி பணிகள் குறித்தும் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினோம். சிகாரிப்புரா தொகுதிக்கு எடியூரப்பா எப்போது சென்றாலும், அந்த தொகுதி மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலில் நீங்களே போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
தொகுதி மக்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவே சிகாரிப்புராவில் நான் போட்டியிடவில்லை, விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பலவிதமாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் சிகாரிப்புரா தொகுதி மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அந்த தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏனெனில் சிகாரிப்புரா தொகுதி மக்கள் எடியூரப்பா மீது வைத்துள்ள அன்பு, மரியாதை அளப்பரியது. அதனை எடியூரப்பாவால் என்றும் மறந்து விட முடியாது.
ஓய்வு பெறவில்லை
சிகாரிப்புரா மக்கள் மீது எடியூரப்பாவும் மிகுந்த அன்பு கொண்டுள்ளார். இது காலம், காலத்திற்கும் தொடர வேண்டும் என்று விரும்பியதால், அந்த தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார், நான் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். என்றாலும், சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இறுதி முடிவு எடுப்பார்கள். இது மட்டும் அல்ல,
மாநிலத்தில் எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் தீர்மானித்து அறிவிப்பார்கள்.
எடியூரப்பாவுடன் பேசும் போது கூட, இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவு எதுவோ, அதுவே இறுதியானது என்று கூறினாா். எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக கூட தகவல்கள் வருகிறது. நான் ஓய்வு பெறவில்லை என்று என்னிடம் கூறினார். அதனால் அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறவில்லை.
எடியூரப்பா பெரிய சக்தி
வருகிற 28-ந் தேதி தொட்டபள்ளாப்புராவில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்பேன் என்றும், அதன்பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவேன், அதற்காக தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா என்றாலே ஒரு பெரிய சக்தி. கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எடியூரப்பாவுக்கு என்று தனி சக்தி உள்ளது. கர்நாடகத்தில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அது எடியூரப்பா மட்டுமே. மக்கள் மத்தியில் இருந்த போராட்டம் மூலமாகவே எடியூரப்பா வளர்ந்தவர். பா.ஜனதா கட்சியுடன் எப்போதும் எடியூரப்பா இருப்பார்.
பா.ஜனதாவுக்கு இக்கட்டு இல்லை
இந்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவாா் என எடியூரப்பா அறிவித்திருப்பதன் மூலம், பா.ஜனதாவுக்கு எந்த இக்கட்டும் ஏற்படவில்லை. எடியூரப்பாவால் இப்போது இல்லை, எப்போதும் இக்கட்டான நிலை வந்ததில்லை. சிகாரிப்புராவில் விஜயேந்திரா போட்டியிடுவது பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவாகும். எடியூரப்பா, பா.ஜனதாவில் ஓரங்கட்டப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
காங்கிரஸ் கட்சியே 4 பாகங்களாக உடைந்து கிடக்கிறது. முதலில் அவர்கள் வீட்டு பிரச்சினையை தீர்த்து கொள்ளட்டும். தேசிய கட்சியான காங்கிரசுக்கு, சாதி ஓட்டு கேட்கும் நிலை வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.