இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்
பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.5¾ கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
வங்கி மேலாளர்
பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியின் மேலாளராக ஹரிசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த வங்கியில் அனிதா என்பவர் தனது கணக்கில் ரூ.1.32 கோடியை டெபாசிட் செய்தாா்.
இதற்கிடையில், தனது டெபாசிட் தொகையை வைத்து சட்டவிரோதமாக சிலர் பல கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாக கூறி, அந்த வங்கியின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
மேலும் சில வாடிக்கையாளர்களும் புகார் அளித்தனர். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினாா்கள்.
ரூ.5.81 கோடி கையாடல்
அப்போது அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் ரூ.5.70 கோடிக்கு கடன் பெற்றிருப்பதாகவும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியில் இருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 28 வங்கி கணக்குகளுக்கும் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மே மாதம் 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை ரூ.5.70 கோடி மற்றும் மற்றொரு வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
ேமலும் இந்த கையாடலில் அந்த வங்கியின் மேலாளர் ஹரிசங்கர் தான் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது ஹரிசங்கரின் வங்கி கணக்குக்கு ரூ.12 லட்சம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது. இதுபற்றி அனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி மேலளார் ஹரிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இளம்பெண்ணுடன் டேட்டிங்
அதாவது வங்கி மேலாளராக பணியாற்றும் ஹரிசங்கர், 'டேட்டிங்' செல்போன் செயலி மூலமாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவருடன் தினமும் டேட்டிங் செய்து வந்துள்ளார். அந்த இளம்பெண் கேட்கும் போதெல்லாம் அவர் பணம் கொடுத்து வந்துள்ளார். இளம்பெண் மீதான மோகத்தால் அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.5.70 கோடியை ஹரிசங்கர் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் தன்னுடன் டேட்டிங் செய்வது குறித்து குடும்பத்தினரிடம் கூறி விடுவதாக மிரட்டி இளம்பெண் பறித்ததாகவும் போலீசாரிடம் ஹரிசங்கர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண் மீதான மோகத்தால் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்ததால் வங்கி மேலாளர் ஹரிசங்கர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இளம்பெண் யார்?
அதே நேரத்தில் ஹரிசங்கர் டேட்டிங் செய்த இளம்பெண்ணிடம் தான் ரூ.5.70 கோடி இருக்கலாம் என்பதால், அவரை பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இளம்பெண்ணை கைது செய்து, பணத்தை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இளம்பெண் மீது ஹரிசங்கர் குற்றச்சாட்டு கூறி இருப்பதால், இளம்பெண்ணுக்கு பின்னணியில் பெரிய கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி கேரளாவுக்கு சென்றதால் டேட்டிங்
பெங்களூருவில் ரூ.5.81 கோடி கையாடல் செய்த விவகாரத்தில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவியின் சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு குழந்தை பிறந்திருந்ததால், தற்போது கேரளாவில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இதன் காரணமாக பெங்களூருவில் தனியாக இருந்த ஹரிசங்கர் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த டேட்டிங் மூலமாக தற்போது அவர் ரூ.5.81 கோடியை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.