சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை


சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை
x

தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

மகரவிளக்கையொட்டி சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 14-ந் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 15-ந் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு சமயத்தில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மகர ஜோதியை காண்பதற்காக மலைப்பகுதிகளில் கூடாரம் அமைத்து குழுக்கள், குழுக்களாக தங்கி இருப்பது வழக்கம். இவ்வாறு தங்கி இருப்பதால் மகரவிளக்கு அன்று சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை தவிர்க்க கேரள வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகரஜோதியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கக் கூடாது. தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மகர ஜோதி தினத்தில் ஜோதியை காண பக்தர்கள் மரங்களில் ஏறி இருப்பதை தவிர்க்க வேண்டும். நோயாளிகள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் பாரம்பரிய நடைபாதையை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். காட்டு பகுதிகளில் வன விலங்குகளுக்கு உணவு வழங்க கூடாது. வனப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளுக்குள் பக்தர்கள் கொண்டு செல்லக் கூடாது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story