இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம்... சில தகவல்கள்


இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம்... சில தகவல்கள்
x

கொரோனாவுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் 40 சதவீதம் அதிகரித்து ரூ.13.8 கோடியாக உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக (சி.இ.ஓ.) பணியாற்றுபவர்களின் வருவாய் பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

டெலாய்ட் இந்தியா எக்சிகியூட்டிவ் பெர்பாமன்ஸ் அண்டு ரிவார்ட்ஸ் சர்வே 2024 என்ற பெயரிலான இந்த கருத்துகணிப்பு ஆனது, 2023-ம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த சர்வேயில், 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. எனினும், பொது துறை நிறுவனங்கள் எதுவும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் ரூ.13.8 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு முன்புள்ள காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இது 40 சதவீதம் அதிகம் ஆகும். இந்த மொத்த ஊதியத்தில் பாதிக்கும் மேற்பட்டவை, குறுகிய கால மற்றும் நீண்டகால ஊக்கத்தொகைகளாக கிடைக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அதிலும், புரொமோட்டர் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் ரூ.16.7 கோடியாக இருக்கிறது. தொழில்முறை சி.இ.ஓ.க்களை விட இந்த புரொமோட்டர் சி.இ.ஓ.க்களின் சம்பளம் அதிகரித்து இருப்பதற்கு 2 காரணிகள் உள்ளன. புரொமோட்டர் சி.இ.ஓ.க்களை விட தொழில்முறை சி.இ.ஓ.க்கள் அடிக்கடி மாறுவார்கள்.

ஆனால், புரொமோட்டர் சி.இ.ஓ.க்களோ நீண்டகாலம் பதவியில் நீடிப்பவர்களாக உள்ளனர். சி.இ.ஓ.க்களின் சம்பளம் அதிகரித்தபோதும், ஊதியம் வழங்குவதில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான சிக்கலான நிலை காணப்படுகிறது. இந்த விகிதம், தொழில்முறை சி.இ.ஓ.க்களுக்கு 57 சதவீதம் என்ற அளவிலும், புரொமோட்டர் சி.இ.ஓ.க்களுக்கு 47 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

இதில், தொழில்முறை சி.இ.ஓ.க்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு நீண்டகால ஊக்கத்தொகை வழியே ஊதியம் அளிக்கப்படுகிறது. பல நிறுவனங்களில், பங்குடன் தொடர்புடைய ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

டெலாய்ட் ஆய்வின்படி, இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சம்பளம் ஆனது, அதிக அளவிலான ஒற்றை இலக்க வருடாந்திர வளர்ச்சி விகிதங்களை அடைந்துள்ளது என பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவீத நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களின் மாற்றம் நிகழ்ந்துள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இவற்றில் 10 புதிய சி.இ.ஓ.க்களில் 6 பேர் நிறுவனங்களில் உள்ளவர்களே பணிநியமனம் செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 4 சி.இ.ஓ.க்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது.


Next Story