6 மாத கர்ப்பிணி மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சி; கணவர் உள்பட 2 பேர் கைது
6 மாத கர்ப்பிணியை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கணவர் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகலூர்:
பெங்களூரு பாகலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், சைத்தன்யா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. திருமணமான நாள் முதல் சைத்தன்யா, தனது மாமியாரை குறை கூறி வந்துள்ளார். மேலும் அவருடன் அவ்வப்போது வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது கணவரை பிரித்து, தனிக்குடித்தனத்திற்கும் அழைத்து வந்துள்ளார். தனது மனைவி, பெற்ற தாயுடன் தகராறு செய்து தன்னை பிரித்து அழைத்து வந்ததால், அரவிந்த் மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து அவர் தனது மனைவியிடம் விவகாரத்து கேட்டார்.
ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். மேலும் தொடர்ந்து தனது கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையே சைத்தன்யா, கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சைத்தன்யா சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டர் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் சைத்தன்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, இந்த வழக்கு பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 6 மாதங்கள் கழித்து, போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடித்தனர்.
மேலும் கார் டிரைவரான உதய் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சைத்தன்யாவின் கணவர் தான் அவரை கார் ஏற்றி கொலை செய்ய கூறியதாக கூறினார். இதையடுத்து போலீசார் அரவிந்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சைத்தன்யா, அரவிந்தின் தாயை கொடுமைப்படுத்தியதுடன், தன்னையும் பிரித்து தனிக்குடித்தனம் அழைத்து வந்துள்ளார். மேலும் விவாகரத்து கேட்டும் சைத்தன்யா கொடுக்காததால் 6 மாத கர்ப்பிணி என்றும் கூட பாராமல் அவரை கார் ஏற்றி கொலை செய்ய அரவிந்த் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று தனியாக ஸ்கூட்டரில் வந்த தனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அரவிந்த்தும் காரில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் கணவர் அரவிந்த் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியை, கார் ஏற்றி கணவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.