காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி
பெங்களூருவில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கடத்தி சென்று உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்ற பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாத். இவரது மனைவி சத்ய பிரேமா. இந்த தம்பதியின் மகன் சசாங்க் (வயது 18). இவர், ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சசாங்க் தனது தூரத்து உறவினரின் மகளை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணும் சசாங்கை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் மைசூருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையில், மைசூருவில் இருந்து அந்த இளம்பெண் சமீபத்தில் பெங்களூருவுக்கு வந்திருந்தார். மேலும் சசாங்க் வீட்டுக்கு இளம்பெண் சென்று வந்துள்ளார். இதன் காரணமாக சசாங்க் மற்றும் இளம்பெண் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது. உடனே இளம்பெண்ணின் பெற்றோர் சசாங்கை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் தனது தந்தையுடன் சசாங்க் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். கல்லூரி முன்பாக ஸ்கூட்டரில் இருந்து மகனை இறக்கி விட்டு விட்டு ரங்கநாத் புறப்பட்டு சென்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் சசாங்க் தனது வீட்டுக்கு புறப்பட்டார். கல்லூரியில் இருந்து சிறிது தூரத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 6 பேர் கும்பல், சசாங்கை வழிமறித்தனர். பின்னர் அவரை, காருக்குள் கட்டாயப்படுத்தி ஏற்றி, அங்கிருந்து கடத்தி சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே சசாங்கின் கை, கால்களை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடத்தல்காரர்களிடம் இருந்து சசாங்கால் தப்பிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில், கும்பலகோடு அருகே கனமினிகே கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சசாங்க் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதில், அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். பின்னர் சசாங்க் உடலில் பிடித்து எரிந்த தீ அணைந்துள்ளது. ஆனாலும் பலத்த தீக்காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். இதுபற்றி பெற்றோருக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு கும்பலகோடு போலீசார் விரைந்து சென்று சசாங்கை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசாங்க் உடலில் 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சசாங்கை கடத்தி சென்று உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஏனெனில் இளம்பெண்ணை காதலிக்கும் போது, 2 பேருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால், இந்த காதலை கைவிடும்படி சசாங்கிடம் இளம்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கு சசாங்கும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபமாக இளம்பெண்ணை சசாங்க் சந்தித்து பேசி காதலை வளர்த்து வந்ததால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வேறு யாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 6 பேரையும் தேடிவருகிறார்கள்.