சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீத வாக்குகளும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
Live Updates
- 17 Nov 2023 11:35 AM IST
மத்திய பிரதேசத்தில் மோரீனா மாவட்டத்தில், வாக்குப்பதிவின் போது இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. திமானி தொகுதியில் வாக்குச்சாவடி 147-148-ல் இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- 17 Nov 2023 11:24 AM IST
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்: மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியா, கவாலியரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- 17 Nov 2023 10:15 AM IST
சத்தீஷ்கரில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 5.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் 11.13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
- 17 Nov 2023 9:58 AM IST
மத்திய பிரதேசத்தில் 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
- 17 Nov 2023 8:48 AM IST
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள்: பிரதமர் மோடி நம்பிக்கை
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் (2 -ஆம் கட்டம்) ஆகிய மாநிலங்களில் இன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பிரதேசத்தில் அனைத்து பிராந்தியங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
- 17 Nov 2023 8:19 AM IST
மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சிதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதலே ஆர்வத்துடன் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
- 17 Nov 2023 8:16 AM IST
சத்தீஷ்காரில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சத்தீஷ்கார் மாநில பாஜக தலைவரும் லோர்மி தொகுதி வேட்பாளருமான அருண் சாவோ, பிலாஸ்பூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- 17 Nov 2023 7:05 AM IST
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230- தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள் இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது
- 17 Nov 2023 6:43 AM IST
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ளது.
- 17 Nov 2023 6:41 AM IST
சத்தீஷ்காரில் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி மற்றும் மாநில கட்சிகள் களத்தில் இருந்தபோதிலும், காங்கிரஸ்-பா.ஜனதா இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.