அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கால் 4 லட்சம் பேர் பாதிப்பு; 36 பேர் பலி


அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கால் 4 லட்சம் பேர் பாதிப்பு; 36 பேர் பலி
x

அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான கோபிலி நதியில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அசாமில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 19 மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கரிம்கஞ்ச் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 14,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீரால் பல தடுப்பணைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story