காங்கிரஸ் யாத்திரையில் பங்கேற்கக் கூடாது என மக்களை அசாம் அரசு மிரட்டுகிறது: ராகுல்காந்தி
தேர்தலில் பா.ஜனதாவை காங்கிரஸ் அமோக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.
திஸ்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் நடைபயணம் செய்து வருகிறார். அங்கு பிஸ்வநாத் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
யாத்திரையின் ஒரு பகுதியாக நாங்கள் நீண்ட உரைகளை மேற்கொள்வதில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் 7-8 மணிநேரம் நடைபயணம் செய்கிறோம். மக்கள் பிரச்சினைகளைக் கேட்கிறோம். அந்த பிரச்சினைகளை அரசிடம் எழுப்புவதே எங்கள் நோக்கம்.
அசாமில் காங்கிரசின் கொடிகள் மற்றும் பதாகைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் சேருவதற்கு எதிராக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
அதோடு யாத்திரையின் வழித்தடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுத்து வருகிறது. மக்களை அடக்கிவிடலாம் என்று அவர்கள் (பா.ஜனதா அரசு) நினைக்கிறார்கள். ஆனால் இது ராகுல்காந்தியின் யாத்திரை அல்ல, மக்களின் குரலுக்கான யாத்திரை என்பதை அவர்கள் உணரவில்லை.
ராகுல்காந்தியோ அல்லது அசாம் மக்களோ உங்களை கண்டு பயப்படவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேர்தல் வரும்போது, பா.ஜனதாவை காங்கிரஸ் அமோக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.