அசாமில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு.. 26 பேர் பலி


Assam Floods 26 dead
x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கரிம்கஞ்ச்:

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான கோபிலி நதியில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 15 மாவட்டங்களில் உள்ள 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கரிம்கஞ்ச் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 41,711 குழந்தைகள் உள்பட 1.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில், காசிரங்கா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் தேசிய நெடுஞ்சாலைக்கு இடம்பெயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சாலையை கடக்கும் விலங்குகளால் விபத்து ஏற்படலாம். இதுபற்றி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆலோசனை நடத்தினார். அப்போது, விலங்குகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும், வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் உயிரியல் பூங்காவில் மூன்று கமாண்டோ படைகள் நிறுத்தப்படும் என முதல்-மந்திரி அறிவித்தார்.


Next Story