அசாமில் குழந்தை திருமண ஒழிப்பு நடவடிக்கை.. முஸ்லிம் திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்


அசாமில் குழந்தை திருமண ஒழிப்பு நடவடிக்கை.. முஸ்லிம் திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்
x

சுதந்திரத்திற்கு முந்தைய காலாவதியான சட்டம் என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை ஒழிப்பதற்காக மாநில அரசு கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. அப்போது, பல முதியவர்கள் பலமுறை திருமணம் செய்து கொண்டதும், அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் இளம் வயதினராக இருப்பதும், சமூகத்தின் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு, 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அக்டோபரில் இரண்டாம் கட்டமாக 915 பேர் கைது செய்யப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம்-1935ஐ ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகவலை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். சட்டப்படி மணமகனும், மணமகளும் முறையே 18 மற்றும் 21 வயதை எட்டாவிட்டாலும் திருமண பதிவை அனுமதிக்கும் விதிகள் இந்தச் சட்டத்தில் உள்ளன. இந்த சட்டத்தை ரத்து செய்வது, குழந்தை திருமணங்களைத் தடை செய்வதற்கான மற்றொரு முக்கியமான நடவடிக்கை என ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதுள்ள 94 முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் வசம் உள்ள திருமண பதிவேடுகளை கையகப்படுத்தி பாதுகாக்க, மாவட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இச்சட்டம் ரத்து செய்யப்பட்ட பின், பாதிக்கப்படும் முஸ்லிம் திருமணப் பதிவாளர்களின் மறுவாழ்வுக்காக, ஒரு முறை இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


Next Story