'அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு தேர்தல் தந்திரம்' - மாயாவதி
அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு தேர்தல் தந்திரம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பல்வேறு நிபந்தனைகள் விதித்து கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13-ந்தேதி திகார் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி சட்டசபை தலைவராக தேர்வான அதிஷி, டெல்லியில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி மர்லெனா (43) பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு தேர்தல் தந்திரம் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது உண்மையில் அவரது தேர்தல் தந்திரம். பொது நலன் மற்றும் பொது நலனில் இருந்து விலகிக்கொள்ளும் அரசியல் சூழ்ச்சி. அவர் நீண்ட காலமாக சிறையில் இருந்ததால் டெல்லி மக்கள் எதிர்கொண்ட எண்ணற்ற அசவுகரியங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?
ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நடக்கும் அரசியல் சண்டையால், நாட்டுக்கும், பொது நலனுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். இதே போல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, உத்தர பிரதேசத்தில் ஜெவார் விமான நிலையம் மற்றும் கங்கா விரைவுச் சாலைக்கு தடைகளை ஏற்படுத்தி, பொது நலன் மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்திய நாட்களை பகுஜன் சமாஜ் அரசும் பார்க்க வேண்டியிருந்தது."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.