டெல்லியை விட அசாமில் அரசுப் பள்ளிகள் சிறப்பாக உள்ளதா? அசாம் முதல் மந்திரி - அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் மோதல்!
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரிக்கும் இடையே டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே சமூக வலைதளமான டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது.
அசாமில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடு பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று, அசாமில் மோசமான முடிவுகள் காரணமாக அசாம் மாநில அரசு 34 பள்ளிகளை மூடியதாக வெளியான செய்திகளை குறிப்பிட்டு அத்தகைய அறிக்கைக்கான இணைப்பை கெஜ்ரிவால் டுவிட்டரில் பகிர்ந்தார்.
மேலும், நாடு முழுவதும் அதிகமான பள்ளிகளைத் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது.பள்ளிகளை மூடுவது ஒரு தீர்வாகாது. கல்வித்துறையில் உங்களின் சிறப்பான பணியை எனக்கு காட்டுங்கள். நீங்கள் டெல்லிக்கு வாருங்கள், டெல்லி கல்வித்துறையில் உள்ள வேலையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்" என்றும் டுவீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடியாக, ஹிமந்தா பிஸ்வா சர்மா வெள்ளிக்கிழமை டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி மற்றும் அசாம் இடையேயான சில வேறுபாடுகளை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் பதிவிட்டுள்ளதாவது:-
"அரவிந்த் கெஜ்ரிவால் ஜி, உங்கள் அறியாமை வேதனை அளிக்கிறது. நான் உங்களுக்கு உதவுகிறேன். டெல்லியை விட அசாம் 50 மடங்கு பெரியது!
உங்கள் 1000 பள்ளிகளை ஒப்பிடும்போது, எங்கள் 44521 அரசுப் பள்ளிகள் 65 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன. அசாமில் அர்ப்பணிப்புடன் பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சம்; மதிய உணவு தொழிலாளர்கள் 1.18 லட்சம். புரிந்துகொள்வீர்களா?"
இவ்வாறு டுவீட் செய்துள்ளார். மேலும், "நீங்கள் அசாமில் இருக்கும்போது, நான் உங்களை எங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்வேன். உங்கள் மொஹல்லா கிளினிக்கை அவை விட 1000 மடங்கு சிறந்தவை. அத்துடன், எங்கள் பிரகாசமான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் சந்திக்கவும்."
இதற்கு பதிலடியாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, "நான் தெரிவித்த கருத்துகளால் நீங்கள் புண்பட்டதாகத் தெரிகிறது. உங்கள் குறைகளை சுட்டிக் காட்டுவது என் நோக்கமல்ல.
நாம் அனைவரும் ஒரே நாடு. நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாறும்" என்று நேற்று டுவிட்டரில் தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றைய டுவீட் வந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளதாவது:- "நம்மிடம் ஒரு பழமொழி உண்டு - 'எப்போது வர வேண்டும்' என்று யாராவது கேட்டால், எப்போது முடியுமோ அப்போது வாருங்கள் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், 'எப்போதும் வராதே' என்று அர்த்தம்.
நான் உங்களிடம் - 'உங்கள் அரசுப் பள்ளிகளைப் பார்க்க நான் எப்போது வர வேண்டும்' கேட்டேன். நீங்கள் என்னிடம் பதில் சொல்லவில்லை. நான் எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்கள், அப்போதுதான் நான் வர முடியும்."
இவ்வாறு டுவீட் செய்துள்ளார்.