கெஜ்ரிவால் கைது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்...?


கெஜ்ரிவால் கைது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்...?
x
தினத்தந்தி 3 April 2024 2:05 PM IST (Updated: 3 April 2024 2:25 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுபற்றி கட்சி தலைவர்களில் ஒருவர் மற்றும் டெல்லி மந்திரியான கோபால்ராய் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை அழித்து விடும் நோக்கத்துடன் கட்சியின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதனால், கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு வரவேண்டும் என அழைக்கிறேன்.

ஏப்ரல் 7-ல், டெல்லி அரசின் மந்திரிகள், கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், வர்த்தகர்கள் வருகை தந்து, எங்களுடன் பங்கேற்கலாம் என்றும் அவர் கூறினார்.

நீங்கள் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைதுக்கு எதிரானவர் என்றால், அந்த கைதுக்கு எதிராக ஏப்ரல் 7-ந்தேதி நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடலாம். வீடு, நகரம் அல்லது எந்த இடத்திலும் கூட்டாக நீங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு சமீப நாட்களாக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில், முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

எனினும், கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். கைது நடவடிக்கையால், அவர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியின் நாடு தழுவிய போராட்டத்திற்கு விடுத்த அழைப்பு எதிரொலியாக அது தேர்தலில் தாக்கம் ஏற்படுத்த கூடும் என அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

நாட்டில், முதல்-மந்திரியாக உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது இது முதல் முறையாகும். அந்த வகையில், அவருடைய இந்த கைது நடவடிக்கை மக்களவை தேர்தலில் எப்படி எதிரொலிக்கும்? என்பது வாக்கு பதிவுக்கு பின்னரே தெரிய வரும்.


Next Story