டெல்லிக்கு 2 புதிய மந்திரிகள் நியமனம் - ஜனாதிபதி முர்மு உத்தரவு
டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா, மந்திரி சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். புதிய மந்திரிகளாக பரத்வாஜ், அதிஷி ஆகியோரை நியமனமும் செய்தார்.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா, மந்திரி சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். புதிய மந்திரிகளாக பரத்வாஜ், அதிஷி ஆகியோரை நியமனமும் செய்தார்.
டெல்லி துணை முதல்-மந்திரி பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் கைதானர். அவரிடம் 8 மணி நேரம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்தது. சி.பி.ஐ. காவல் முடிந்த நிலையில் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மந்திரி பதவி வகித்து பின்னர் இலாகா இல்லாத மந்திரியாக இருந்து வந்த வகித்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இருவரும் தங்களது பதவியை கடந்த 28-ந்தேதி ராஜினாமா செய்தனர்.
இருவரது ராஜினாமாக்களையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஏற்றுக்கொண்டார். இதை ஜனாதிபதி மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டெல்லிக்கு 2 புதிய மந்திரிகளை நியமித்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டார். அவர்கள், சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி மர்லினா ஆவார்கள்.
பரத்வாஜ் (வயது 43), 2013-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். தற்போது அவர் டெல்லி ஜல் வாரியத்தின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தார். கெஜ்ரிவால் அரசில் 2013-ல் சிறிது காலம் மந்திரி பதவியும் வகித்துள்ளார்.
பெண் தலைவரான அதிஷி மர்லினா (41), 2020-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது முதல் அதில் இருந்து வருகிறார். சிசோடியாவின் கல்வித்துறை ஆலோசராக இருந்து வந்தார்.
சவுரப் பரத்வாஜூம், அதிஷி மர்லினாவும் விரைவில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.