தாமதத்தால் வெறுப்பு: விமானம் கடத்தப்பட்டதாக பொய் தகவல் வெளியிட்ட பயணி கைது

கோப்புப்படம்
தாமதத்தால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, விமானம் கடத்தப்பட்டதாக பொய் தகவல் வெளியிட்ட பயணி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு நேற்று முன்தினம் வந்த ஒரு விமானம், மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் காலை 9.45 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானம், பிற்பகல் 1.40 மணிக்கு அங்கிருந்து ஜெய்ப்பூர் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
விமான தாமதத்தால் அதில் பயணித்த பயணிகள் தவித்துப் போயினர். அவர்களில், ராஜஸ்தானின் நாகார் நகரைச் சேர்ந்த மோத்தி சிங் ரத்தோர் என்பவரும் ஒருவர்.
அவர், விமானம் கடத்தப்பட்டதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். அதையடுத்து அவர் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகு விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் மாற்றிவிடப்பட்டு, தாமதம் ஏற்பட்டதால் வெறுத்துப்போன தான் அவ்வாறு செய்ததாக பயணி மோத்தி சிங் கூறினார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.