ஆந்திர பிரதேசம்: சொகுசு கார்-லாரி மோதல்; 5 பேர் பலி
சொகுசு கார் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, லாரி மீது மோதி உள்ளது என சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியுள்ளார்.
கடப்பா,
ஆந்திர பிரதேசத்தில் அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பர்லாபள்ளி கிராமத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
கடப்பா நோக்கி சென்றபோது, அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில், நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது மோதியது. இந்த விபத்தில், சந்திரா (வயது 50) மற்றும் சுப்ரமணியம் (வயது 62) ஆகிய 2 பேர் பலியானார்கள்.
அவர்கள் பால் பண்ணையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். கார் மோதிய வேகத்தில் லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் திலக், விக்ரம் மற்றும் ஸ்ரீனு என அடையாளம் காணப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மதனப்பள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் காரின் மேற்கூரை பெயர்ந்து, தூக்கி எறியப்பட்டது. சொகுசு கார் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, லாரி மீது மோதி உள்ளது என சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியுள்ளார். போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசாத் ரெட்டி விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.